பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில், மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில், மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் மற்றும் தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை கண்டன உரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானபோது கல்வராயன்மலையை புதிய தாலுகாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் கல்வராயன்மலை ஒன்றியத்தில் இருந்த பொட்டியம், மல்லிகைபாடி ஆகிய கிராமங்களை சின்னசேலம் தாலுகாவிலும், பாச்சேரி, பாலப்பட்டு, மூலக்காடு, ஆனைமடுவு ஆகிய 4 கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 6 கிராமங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட கல்வராயன்மலை தாலுகாவில் சேர்க்க வேண்டும், கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கரியாலூர், பாச்சேரி, வஞ்சிக்குழி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளை மலைவாழ் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வராயன்மலையில் காப்புக்காடு அறிவிப்பு செய்த பகுதியை ரத்து செய்ய வேண்டும், இணைப்பு சாலைகளை தார்ச்சாலைகளை மாற்றித்தர வேண்டும், சாலை வசதியற்ற கிராமங்களுக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும். கிராமங்களில் மலைவாழ் மக்கள் நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு செய்ய வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும், கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சிகளுக்கு ஊராட்சி செயலாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர், சத்துணவு பணியாளர், அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் உள்ள அடிப்படை பணிகளை மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் சந்தோஷ்குமார், மாநில துணை தலைவர் தர்மன் உள்பட 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story