சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம்


சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் நேற்று வாழையை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரல்வாய்மொழி,

காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக ஆரல்வாய்மொழி, தோவாளை, வெள்ளமடம் பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சில இடங்களில், சாலையில் உள்ள பள்ளத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்களே சீரமைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வாழையை நட்டு தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பேரூர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி நாகராஜன் முன்னிலை வகித்தார். அப்போது, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சாலையை சீரமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேதுவேல், மாநில பேச்சாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ஜோசப், சதீஸ், பாலமுருகன், டேனியல், முருகன், புலிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story