3-வது முறையாக நடந்த தேர்தல்: வாடிப்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - தி.மு.க.வுக்கு துணைத்தலைவர் பதவி


3-வது முறையாக நடந்த தேர்தல்: வாடிப்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - தி.மு.க.வுக்கு துணைத்தலைவர் பதவி
x
தினத்தந்தி 4 March 2020 10:15 PM GMT (Updated: 4 March 2020 9:11 PM GMT)

வாடிப்பட்டி யூனியனில் 3-வது முறையாக நடந்த தேர்தலில் தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், துணைத்தலைவர் பதவியை தி.மு.க.வும் கைப்பற்றியது.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 7 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதில் சுயேச்சையாக வெற்றி பெற்ற கார்த்திகா ஞானசேகரன் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதனால் அ.தி.மு.க.வின் பலம் 8 ஆக உயர்ந்தது.

அதன்பின் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று காலை தேர்தல் அதிகாரி உமா மகேஸ்வரி, உதவி தேர்தல் அதிகாரி ராஜா ஆகியோர் முன்னிலையில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. 10.50 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக மகாலட்சுமியும், தி.மு.க. வேட்பாளராக பசும்பொன் மாறனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

11.15 மணிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் பின் 11.35க்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமிக்கு 8 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பசும்பொன்மாறனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மாணிக்கம் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் செயலாளர் பாப்புரெட்டி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்தனர்.

மாலை 3 மணிக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பாக தனலெட்சுமியும், அ.தி.மு.க. சார்பாக கார்த்திகாவும் போட்டியிட்டனர். இதில் இருவருக்கும் தலா 7 வாக்குகள் கிடைத்தன. அதனால் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் துணைத்தலைவராக தி.மு.க. வேட்பாளர் தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்டார். காலையில் அ.தி.மு.க.வும், மாலையில் தி.மு.க.வும் வெற்றி பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யூனியன் தலைவர் தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் கவுன்சிலர்கள் எண்களை குறித்ததாகவும், அதை தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பப் போவதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

Next Story