கடலூர் அருகே பரபரப்பு: கடலில் மிதந்து வந்த மரப்பெட்டி - சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை


கடலூர் அருகே பரபரப்பு: கடலில் மிதந்து வந்த மரப்பெட்டி - சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 5 March 2020 3:45 AM IST (Updated: 5 March 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே கடலில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்தது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள தாழங்குடாவை சேர்ந்த மீனவர் சிவப்பிரகாசம் (வயது 42) உள்பட 5 பேர் நேற்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துவிட்டு மதியம் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் தாழங்குடா கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வந்த போது, ஒரு மரப்பெட்டி ஒன்று கடலில் மிதந்து வந்ததை பார்த்தனர். அந்த மரப்பெட்டியை அவர்கள் கயிறு கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் அவர்கள் இது பற்றி கடலூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த மரப்பெட்டியை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 15 அறைகள் இருந்தன. அந்த அனைத்து அறைகளிலும் வெள்ளை நிறத்திலான பவுடர் இருந்தது. மொத்தம் 30 கிலோ பவுடர் இருந்தது.

அந்த பவுடரை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இது பற்றி கடலூர் முதுநகர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பவுடரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த வெள்ளை நிற பவுடர் ஹெராயினாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அந்த பவுடர் கிளிஞ்சல் சிப்பி பவுடர் என்றும், அந்த பவுடர் பறவைகள் உண்ணக்கூடியது என்றும், கண்ணாடியை சுத்தம் செய்ய உதவும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கியதும் இந்த வகை பவுடர்தான் என்று சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாகவும், அந்த பவுடர் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தற்போது அந்த பவுடர் கடல் நீரில் நனைந்து உள்ளதால், அது எதற்கும் இனி பயன்படாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் கடலூர் தாழங்குடா கடற்கரையோரம் மிதந்து வந்த மரப்பெட்டியில் வெள்ளை நிற பவுடர் இருந்ததால், அந்த பவுடர் போதைப்பொருளாக இருக்குமா என்ற கோணத்திலும் உளவுப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story