மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளி அடித்துக்கொலை தம்பி கைது


மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளி அடித்துக்கொலை தம்பி கைது
x
தினத்தந்தி 4 March 2020 10:30 PM GMT (Updated: 4 March 2020 10:25 PM GMT)

குமாரபாளையம் அருகே மது குடிக்க பணம் ேகட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்தையன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன்கள் கோபாலகிருஷ்ணன் (வயது 37), ராஜா(31). சித்தையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பழனியம்மாள் தனது மகன்களுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

கோபாலகிருஷ்ணன், தறி எந்திரம் பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராஜா விைசத்தறி தொழிலாளியாக உள்ளார். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகாத நிலையில், கோபாலகிருஷ்ணன் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர், தனது தம்பி ராஜா மற்றும் தாயார் பழனியம்மாளிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை ராஜா கண்டித்து வந்துள்ளார்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவுப்பணிக்கு சென்ற ராஜா நேற்று முன்தினம் பகலில் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன் தூங்கிக்கொண்டு இருந்த தம்பி ராஜாவை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, அருகில் கிடந்த உருட்டுக்கட்ைடயை எடுத்து அண்ணனின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் நிலைதடுமாறி சரிந்து விழுந்த கோபாலகிருஷ்ணனை அவரது தம்பியும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு உடனடியாக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு நேற்று காலை கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த அண்ணனை தம்பியே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story