அரியூரில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை? போலீஸ் விசாரணை


அரியூரில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2020 5:09 AM IST (Updated: 5 March 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

வில்லியனூர்,

புதுவை அரியூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 42). தூத்துக்குடியை சேர்ந்தவர் லட்சுமி (38). இவர்கள் இருவரும் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். தனசேகரன் அவ்வப்போது வீடுகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலும் செய்து வந்தார். லட்சுமியும், தனசேகரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் அரியூரில் மூர்த்தி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தனது மகளை தனசேகரன் அதே பகுதியில் வசிக்கும் தாயார் வீட்டில் ஒப்படைத்து விட்டு அலங்கார வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டார்.

அழுகிய நிலையில் பிணம்

இந்த நிலையில் லட்சுமி வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மூர்த்தி மற்றும் அக்கம் பக்கத்தினர் லட்சுமியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி லட்சுமி அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

லட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story