பழனி அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


பழனி அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 5 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

பழனி,

பழனி வனச்சரகத்தில் யானை, மான், காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை, கோடைகாலத்தில் தீவனம் மற்றும் குடிநீருக்காக மலையடிவார பகுதிக்கு வருகின்றன. குறிப்பாக யானைகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டம் மற்றும் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன.

இதனை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது. எனினும் வனவிலங்குகள், அவ்வப்போது அடிவார பகுதிக்கு வந்து செல்கின்றன. இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பழனி வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீரூற்றுகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பாலாறு-பொருந்தலாறு அணையின் அடிவார பகுதிகளான தேக்கந்தோட்டம், புளியமரத்துசெட் உள்ளிட்ட இடங்களுக்கு யானைகள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பழனி அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியில் விவசாயிகள் கொய்யா, தென்னை, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோம்பைபட்டி பகுதியில், காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

அதன்படி நேற்று அப்பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள், அங்கு அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை தின்று சென்றன.

மறுநாள் காலையில் சென்று அவர் பார்த்தபோது அங்கு மக்காச்சோளங்கள் சிதறி கிடந்தன. மேலும் அருகில் யானையின் கால்தடம் இருந்தது. இதையடுத்து அங்கு காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் மலையடிவார தோட்டத்துக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story