பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வணிகர்கள் துணிப்பையை பயன்படுத்த வேண்டும்; விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி அறிவுறுத்தல்

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பையை வணிகர்கள் பயன் படுத்த வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு கூட்டம்
கரூர் நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கரூர் திண்ணப்பாகார்னரில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு கரூர் நகராட்சி ஆணையர் சுதா தலைமை தாங்கி பேசுகையில், பாலித்தீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்காமல் அப்படியே மண்ணில் இருக்கும். எனவே அதனால் நிலத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. கரூர் நகராட்சியை பொறுத்தவரையில் 48 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து தினமும் 70 டன் குப்பைகள் சேகரிக்கப் படுகின்றன.
இதில் அதிகமாக பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் குறைவான துப்புரவு பணி யாளர்கள் உள்ள கரூர் நகராட்சியில் மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து 120 கிலோ மீட்டர் தூரம் சென்று அரியலூர் சிமெண்டு ஆலைக்கு கொடுத்து தான் அதனை அப்புறப்படுத்திட வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படு கிறது. எனவே அடுத்த தலைமுறையின் நலன் கருதி வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக துணிப்பை, மூங்கில் கூடை, வாழை இலை, பாக்குமரத்தட்டு போன்றவற்றை பயன் படுத்திட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தள்ளுவண்டி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம்
இதில் சிறப்பு விருந்தினராக சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அசோக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டால் ரூ.500-லிருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படியும் தொழில் நிமித்தமாக தள்ளுவண்டி கடைகள், பூக்கடை உள்ளிட்டவற்றில் பரவலாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. சூடான டீ, சாம்பார் போன்றவற்றை பாலித்தீன் பையில் ஊற்றி வைக்கிற போது அதன் ரசாயன பொருள் உருகி அதனுள்ளேயே கலக்கிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் பாலித்தீன் பை போன்றவை சாக்கடையில் போய் அடைப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் அதை தவறி உண்பதால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதை பார்த்திருக்கிறோம். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல், அதற்குரிய மாற்றுபொருளாக துணிப்பை, பாக்குமரத்தட்டு என அரசு அறிவித்துள்ளவற்றை பயன்படுத்திட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியின்போது, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுப் புறசூழலை பாதுகாப்போம் என்பன போன்ற உறுதி மொழியேற்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கரூர் நகர்நல அதிகாரி பிரியா மற்றும் கரூர் வணிகர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் நிறுவனத்தினர், மருத்துவமனை நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story