பாளையங்கோட்டையில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி; 12-ந் தேதி நடக்கிறது
பாளையங்கோட்டையில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
விளையாட்டு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம், பெண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம்,
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக, இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து போட்டி ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது. கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெறும்.
10-ந்தேதிக்குள்...
மேற்கண்ட போட்டிகளில் அரசு ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று கலந்து கொள்ளும் போட்டிகளின் விவரத்துடன் நுழைவு படிவத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெயர் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story