திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா நாளை மறுநாள் தேரோட்டம்


திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா நாளை மறுநாள் தேரோட்டம்
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 7:18 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

மாசித் திருவிழா 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

7–ம் நாளான நேற்று விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடைபெற்றது. பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

சிவப்பு சாத்தி கோலம் 

தொடர்ந்து சுவாமி சண்முகர்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி–தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். சுவாமியின் பின்புறம் சிவ அம்சமாக நடராஜர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் சுவாமி சண்முகர் அம்பாள்களுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

8–ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தேரோட்டம் 

9–ம் நாளான நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது. 10–ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

Next Story