சிவகிரி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மைத்துனர் கைது
சிவகிரி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
சிவகிரி,
சிவகிரி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
இன்று திருமணம்
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை இந்திரா வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனீஸ்வரன் என்ற முனியப்பன் (வயது 26). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் உத்தப்பபுரம் பகுதியில் உள்ள முனீஸ்வரனின் தங்கை முனீஸ்வரி, அவரது கணவர் வீரசங்கிலி முருகன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மலைக்கு வந்தனர்.
கழுத்தை அறுத்துக் கொலை
அப்போது, கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரசங்கிலி முருகன் தனது மனைவியை அடித்தார். இதை அறிந்த முனீஸ்வரன், வீரசங்கிலி முருகனை அடித்துள்ளார். இதனால் அவருக்கு அவமானம் ஏற்பட்டது. மேலும் முனீஸ்வரனுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலும் வீரசங்கிலி முருகனை முறையாக அழைக்காததாலும் அவர் கோபத்தில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். முனீஸ்வரன் தனி அறையில் படுத்து இருந்தார். அப்போது, அந்த அறைக்கு வீரசங்கிலி முருகன் சென்றார். அங்கு உறங்கிக் கொண்டு இருந்த முனீஸ்வரனின் கழுத்தை கத்தியால் அறுத்துப் படுகொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வீரசங்கிலி முருகன் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார்.
கைது
நேற்று காலையில் முனீஸ்வரனின் தாயார் பஞ்சவர்ணம் எழுந்து மகனின் அறைக்கு சென்றார். அங்கு தனது முனீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்களும் ஓடி வந்து முனீஸ்வரன் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வீரசங்கிலி முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளையை அவரது மைத்துனர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story