அரசு மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு முதல்-அமைச்சர் தகவல்


அரசு மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு முதல்-அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 12:30 AM GMT (Updated: 5 March 2020 4:51 PM GMT)

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் வரவேற்று பேசினார்.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன், சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.134 கோடி நலத்திட்ட உதவிகள்

மேலும் ரூ.1,167 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.34 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து 33,141 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 37 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் 90 சதவீத கோழி மற்றும் முட்டைகள் இந்த மாவட்டத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது மட்டும் இன்றி லாரி, ரிக் தொழிலுக்கும் இந்த மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் 60 ஆயிரம் லாரிகள் உள்ளன.

ஜவுளி உற்பத்தி மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியும் இங்கு அதிக அளவில் உள்ளன. தொழில் வளம் மிக்க மாவட்டமாக திகழ்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் புதிதாக 6 அரசு மருத்துவக்கல்லூரிகளை நிறுவினார். அவரது மறைவுக்கு பிறகு ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்று தந்து பெருமை சேர்த்து உள்ளோம்.

85 சதவீத இடங்கள்

கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் 1,945 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கூடுதலாக 885 இடங்கள் உருவாக்கப்பட்டன. அவரது வழியில் நடக்கும் இந்த ஆட்சியில் கடந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெற்று தரப்பட்டது. தற்போது புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து இருப்பதன் மூலம் கூடுதலாக 1,650 மருத்துவ இடங்கள் கிடைத்து உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த அரசு என்ன செய்தது, அரசு மருத்துவக்கல்லூரியால் தமிழகத்திற்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவீத மாணவர் சேர்க்கை அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வாய்ப்பை பெறலாம். தமிழகத்திற்கு கடந்த 8 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு பெற்று தந்து உள்ளது.

ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

முதியோர் உதவித்தொகை

தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலமாக 5 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 24,407 மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் 6,581 ஓய்வூதியர்களுக்கு 3 மாதத்தில் முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். அது மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

கோதாவரி-காவிரி ஆறுகளை இணைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லாத நிலை உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story