நாகர்கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: அடுத்த ஆண்டு முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்கக்கூடாது - இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தகவல்
நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அடுத்த ஆண்டு முதல் ‘ஹால்மார்க்‘ முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்,
மத்திய அரசின் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சார்பில் ஐ.எஸ்.ஐ. முத்திரை, தங்க நகைகளுக்கான ‘ஹால்மார்க்‘ முத்திரை தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், டாக்டர்கள், பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குனர் அஜய் கண்ணா, பிரிவு அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசும்போது கூறியதாவது:-
ஆபரண தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வமான முத்திரைதான் ‘ஹால்மார்க்‘. இது இந்திய தரநிர்ணய அமைவனத்தால் 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நுகர்வோர்கள் மாற்றுக்குறைவான தங்க நகைகளை வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்க இந்த முத்திரை பயன்படுகிறது. பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும்போது ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குவது, வாங்கும் தங்கத்தின் சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதில் நான்கு முத்திரைகள் இருக்கும். அவை பி.ஐ.எஸ். முத்திரை, நேர்த்தித்தன்மை முத்திரை, அசேயிங் மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகை விற்பனையாளர் முத்திரை. இவை நான்கும் இருந்தால்தான் அது ஹால்மார்க் செய்யப்பட்ட நகை. ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், கடைக்காரரிடம் அந்த பூதக்கண்ணாடியை வாங்கி நான்கு முத்திரைகளையும் சரிபார்த்த பின்னரே வாங்க வேண்டும்.
அடுத்த (2021) ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதிக்கு பிறகு ஹால்மார்க் முத்திரை உள்ள தங்க நகைகள் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு நகை எவ்வளவு எடை இருந்தாலும் ஹால்மார்க் முத்திரை பெற வெறும் 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது. எனவே ஹால்மார்க்கிங் நகை அதிக விலை என்று கூறுவது தவறு. நீங்கள் வாங்கிய ஹால்மார்க் நகைகளில் ஏதேனும் குறை இருந்தால் உங்கள் ஒரிஜினல் பில்லுடன் எங்களது இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை தரமணி சி.ஐ.டி. வளாகம் என்ற முகவரியில் உள்ள தென்பிராந்திய அலுவலகத்தை 044-22541442, 22541216 என்ற தொலைபேசி எண்களிலும், கோயம்புத்தூர் அலுவலகத்தில் 0422- 2210141, 2249016 என்ற தொலைபேசி எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உறைவிட மருத்துவ அதிகாரி நாராயணன், டாக்டர் சுனில்ராய், இந்திய தரநிர்ணய அமைவனத்தின் நாகர்கோவில் மைய அதிகாரி அர்னால்டு அரசு மற்றும் மாணவ- மாணவிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story