நில ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள்


நில ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 March 2020 10:15 PM GMT (Updated: 5 March 2020 5:05 PM GMT)

நில ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் என கூடலூர் அருகே காந்திநகரில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி காந்திநகர், சின்னசூண்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

முகாமில் காந்திநகர் மக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் சுகுமாறன், செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி உள்ளதாவது:-

இப்பகுதியை 16-ஏ பிரிவின் கீழ் வனநிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் மக்கள் வசிக்கும் இடத்தை வனநிலமாக அறிவித்துள்ளதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

இதனை சீரமைப்பதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு வர வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர். மேலும் சாலைகள், பாலங்கள் முழுமையாக துண்டித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஓவேலி பகுதி விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் மூலம் கிடைக்கின்ற திட்டங்கள், சலுகைகள் கிடைப்பது இல்லை. குறிப்பாக மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே தேயிலை வாரிய சலுகைகள் இப்பகுதி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத பிரதமர் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய ரூ.6 ஆயிரம் தொகையும் ஓவேலி விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

ஓவேலி பகுதியில் ஜென்மம் நிலப்பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற எம்பவர் கமிட்டி மேற்பார்வையில் ஜென்மம் நிலம் உள்ளது. புதிய ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது என கமிட்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும். நில ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம். நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு 3 பேர் கொண்ட கமிட்டி அமைத்து ஆராய்ந்து வருகிறது.

பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலமாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று சில வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர் பந்தலூர், சேரம்பாடி பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார்.

Next Story