மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் - கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கோவை,
கோவை மாநகர் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட சரவணம்பட்டியில் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது. பகுதி பொறுப்பாளர் பையாகவுண்டர் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி-சந்தியா தம்பதியின் பெண் குழந்தைக்கு செந்தாமரை என்ற பெயரை உதயநிதி ஸ்டாலின் சூட்டினார். அதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் மருதமலை சேனாதிபதி புதிதாக கட்டி உள்ள வீட்டின் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் வடவள்ளி அருகே உள்ள கே.என்.ஜி.புதூர் மற்றும் கோவை டாடாபாத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு இளைஞர் அணியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. இளைஞர் அணியில் 30 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் செயல்பட்டு வருகிறோம். கோவை மாநகர் பகுதியில் மட்டும் இன்னும் இலக்கை எட்டவில்லை. அதை உடனடியாக அடைய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றுதான் பொதுமக்கள் நினைத்து வருகிறார்கள். இந்த ஆட்சி முடிய இன்னும் ஒருவருடம்தான் இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தமக்கள் முடிவு செய்து விட்டனர்.
தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்து இருந்தால் நாம் 90 சதவீத இடங்களை பிடித்து இருப்போம். இருப்பினும் நாம் 60 சதவீத இடத்தை பிடித்து இருப்பது வெற்றியைதான் காட்டுகிறது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது.எனவே கட்சியில் உள்ள இளைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் ஆட்சியை பிடிக்க அயராது உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதன், பீளமேடு பகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜன் ஆகியோரின் வீட்டிற்கு சென்று, அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2060 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, ஏழை-எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களுக்கு தி.மு.க. எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, நா.கார்த்திக் எம்.எல்.ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ மற்றும் அஸ்ரப், சபரி, கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் மாரிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் உதயநிதி ஸ்டாலின் சென்னை புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story