கொரோனா வைரஸ் பீதி: முக கவசம் அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளால் பரபரப்பு


கொரோனா வைரஸ் பீதி: முக கவசம் அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 March 2020 10:45 PM GMT (Updated: 5 March 2020 5:31 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால், கன்னியாகுமரிக்கு வந்த வடமாநில சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்த நிலையில் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி, 

சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்க்கு 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பலத்த மருத்துவ பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதவிர முக்கிய நகரங்களில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இங்கு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்களும் கொரோனா வைரஸ் பீதியால் முகத்தில் கவசம் அணிந்து வருகிறார்கள்.

நேற்று கன்னியாகுமரிக்கு வந்த வடமாநில சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரை, படகுதுறை, திரிவேணி சங்கமம் ஆகியவற்றை சுற்றி பார்த்ததை காண முடிந்தது. மேலும், பகவதி அம்மன் கோவிலிலும் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர். முக கவசம் அணிந்து சுற்றுலா பயணிகள் வலம் வந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story