இளம்பெண்ணை தாயாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை


இளம்பெண்ணை தாயாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 11:12 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை தாயாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மங்களூரு, 

சிக்கமகளூரு அருகே நாககுண்டனஹள்ளியை சேர்ந்தவர் தாசய்யா(வயது 38). தொழிலாளியான இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தாசய்யா தங்கி இருந்த வீட்டின் அருகே கொப்பல் மாவட்டம் குஷ்டகியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 20 வயது மகளுடன் வசித்து வந்தனர். பக்கத்து வீடு என்பதால் தாசய்யாவுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். இதுபற்றி அறிந்த தாசய்யா, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி தாசய்யா, அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதன்பின்னர் பலமுறை திருமண ஆசைக்காட்டி தாசய்யா, இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தாசய்யாவிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த இளம்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணை சந்தித்த தாசய்யா எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தாசய்யா மீது மங்களூரு புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசய்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது.

கைதான தாசய்யா மீது போலீசார், மங்களூரு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து இருந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நீதிபதி சையதுன்னிசா தீர்ப்பு கூறினார்.

அதில் தாசய்யா மீதான குற்றம் நிருபணம் ஆகி உள்ளதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story