குபேரன் வழிபட்ட தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்


குபேரன் வழிபட்ட தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
x
தினத்தந்தி 5 March 2020 10:30 PM GMT (Updated: 5 March 2020 7:33 PM GMT)

குபேரன் வழிபட்ட தலமான தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பாலாலயம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் இந்த கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பது தனி சிறப்பாகும். அதுமட்டுமின்றி குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தபோது தனது செல்வங்களை ராவணனிடம் இழந்ததாக கூறப்படு கிறது.

இழந்த செல்வங்களை மீட்பதற்காக குபேரன் தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும், சிவனின் அருளால் இழந்த செல்வங்களை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் குபேர யாகம் நடைபெற்று வருகிறது.

குடமுழுக்கு

இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், அய்யப்பன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, சரஸ்வதி, குபேரன், பஞ்சமுக ஆஞ்சநேயர், நவக்கிரகம், அம்மன் ஆகியோருக்கு தனி, தனி சன்னதிகள் உள்ளன. மூலவராக தஞ்சபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்த கோவில் கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி பாலாலயம் நேற்று நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கணபதி பூஜை மற்றும் 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.30 மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது.

பாலாலயம்

அதன் பின்னர் காலை 10 மணிக்கு விமான பாலாலயம் நடைபெற்றது. அதன்படி அனைத்து சன்னதி விமானங்களின் சக்தியையும் வேதாசிகம முறைப்படி கோவில் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story