கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 6 March 2020 5:00 AM IST (Updated: 6 March 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடங்களை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கரூர் காந்திகிராமத்தில் 27.49 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.269 கோடியே 59 லட்சம் நிதியில் கட்டுமான பணிகள் நடந்தன. 2019-2020-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 150 பேர் படிப்பதற்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்குவதற்கு ஏதுவாக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறே காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிலையில் உள்நோயாளிகள்-வெளிநோயாளிகள் பிரிவு, கலைஅரங்கம், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட கட்டிட பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.

புதிய கட்டிடங்கள் திறப்பு

அந்த வகையில் நேற்று, கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.155¾ கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நாமக்கல்லில் இருந்து காரில் கரூருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் வருகை தந்தார். மதியம் 2.30 மணியளவில் காந்திகிராமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அவர் வந்தடைந்ததும், அவருக்கு அங்கு திரண்டிருந்த பெண்கள் கும்ப மரியாதை அளித்தனர். அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அமைச்சர்களுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மருத்துவமனை கட்டிட கல்வெட்டினை முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.

நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி

அதன் பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். அப்போது அங்கு தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட அரசு டாக்டர் விஜயகுமார், சிறுவன் சஞ்சய் ஆகியோர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் முதல்- அமைச்சர் கலந்துரையாடினார். தசை சிதைவு, முதுகுதண்டு பாதிப்புக்குள்ளானோர் எழுந்து நடப்பதே சிரமம் ஆகும். எனினும் அரசின் சார்பில் 3,000 பேருக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலி வழங்கியமைக்கு நன்றி என அந்த டாக்டர் தெரிவித்தார். அப்போது மக்கள் நலப்பணிகள் ஆற்றவே நாங்கள் உள்ளோம் என கூறியவாறே வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து முதல்-அமைச்சர் புறப்பட்டு அவசர சிகிச்சை பிரிவு கட்டிட பகுதியினை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு ரூ.6 கோடியே 72 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சைக்காக அமைக் கப்பட்டுள்ள நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை இயக்கி வைத்து முதல்-அமைச்சர் பார்வையிட்டார். அதன்பிறகு நிகழ்ச்சியை முடித்து கொண்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு அவர் சென்றார். முதல்-அமைச்சர் வருவதற்கு முன்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில், கல்யாணபசுபதீஸ்வரர் சாமி படம் வைக்கப்பட்டு யாகம் வளர்த்து பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடங்களை யும், வாங்கல் குப்புச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களையும் கல்வெட்டு மூலம் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, பாண்டியராஜன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ், கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், டீன் ரோஸிவெண்ணிலா, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story