ஜெகதாபி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


ஜெகதாபி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 5 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-06T02:47:57+05:30)

ஜெகதாபி மாரியம்மன் கோவிலில் நடந்த மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஜெகதாபியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அன்று இரவு ஊர் பொது கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க வாணவேடிக்கை யுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து மாரியம்மனுக்கும், இதே கோவிலிலுள்ள பகவதி அம்மனுக்கும் புனித நீர், இளநீர், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

திரளான பக்தர்கள்

தொடர்ந்து நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை மஞ்சள் நீராடுதலுடன் கரகம் பொது கிணற்றில் விடப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த திருவிழாவில் ஜெகதாபி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளியணை போலீசார் செய்திருந்தனர்.

Next Story