சேலம் விமான நிலைய விரிவாக்கம்: நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு


சேலம் விமான நிலைய விரிவாக்கம்: நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 March 2020 11:30 PM GMT (Updated: 5 March 2020 10:43 PM GMT)

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக நில அளவீடு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன.

விமான நிலையம் விரிவாக்கத்தால் காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட விவசாய விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும். இதனால் தங்கள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கொடுக்க மாட்டோம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

நில அளவீடு பணி

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில அளவீடு பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் விவசாயிகள் தங்கள் நிலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு கைப்பற்றப்படுமா?. அவ்வாறு கைப்பற்றினால் உரிய இழப்பீடு கிடைக்குமா? என்பது தெரியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தும்பிபாடி மாரியம்மன் கோவில் அருகே நேற்று சேலம் விமான நிலைய விரிவாக்க பணி தனி தாசில்தார் அறிவுடைநம்பி மற்றும் வருவாய் துறையினர் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விரிவாக்கத்திற்கு கொடுக்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் நீங்கள், விளை நிலங்கள் மற்றும் தென்னை, தேக்கு மற்றும் மரங்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று கூட தெரிவிக்காமல் அளவீடு செய்கிறீர்கள் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு அதிகாரிகள் தற்போது அளவீடு பணி தான் நடக்கிறது. அடுத்த கட்டமாகதான் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது தெரியவரும் என்று கூறினார்கள். இதனால் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story