சேலத்தில், மூதாட்டி கொலை: மகன் கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில், மூதாட்டி கொலை: மகன் கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 March 2020 10:51 PM GMT (Updated: 5 March 2020 10:51 PM GMT)

சேலத்தில் மூதாட்டி கொலையில் கள்ளக்காதலியுடன் மகன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி நல்லம்மாள் (வயது 65). இவர்களுக்கு சிவகுமார் (47) என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். சிவகுமாருக்கு திருமணமாகவில்லை. இவர்கள் சொந்த ஊரான மின்னாம்பள்ளியில் உள்ள நிலங்களை விற்றுவிட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அம்மாபேட்டையில் குடியேறினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நல்லம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து தனது தாயை கொலை செய்து விட்டதாக கூறி சிவகுமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதல்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

அம்மாபேட்டை திரு.வி.க. நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவி ஜெயலட்சுமி (63). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. சிவகுமாருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து சிவகுமார் வீட்டிற்கு ஜெயலட்சுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவர்கள் உல்லாசமும் அனுபவித்து வந்தனர். இதனால் தான் சிவகுமார் திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளார்.இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நல்லம்மாள் சிகிச்சை பெற வசதியாக மகள் வசித்து வரும் அம்மாபேட்டைக்கு வரமுடிவு செய்தார். இதற்காக அவர்களின் சொத்துகளை விற்க முடிவு செய்தனர். நிலங்களை விற்றதன் மூலம் ரூ.1¼ கோடி கிடைத்துள்ளது. இந்த பணத்தின் மூலம் அம்மாபேட்டையில் நிலம் வாங்கி வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் சிவகுமார், தனது தாய் மற்றும் தங்கையிடம் அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர்களும் அவர் கேட்கும் போது ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

2 பேர் கைது

இந்த பணம் மற்றும் நகைகளை சிவகுமார், ஜெயலட்சுமிக்கு கொடுத்து வந்துள்ளார். இதை அவருடைய தாய் கண்டித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளக்காதலுக்கு நல்லம்மாள் இடையூறாக இருந்து வந்ததால், அவரை கொலை செய்ய சிவகுமார், ஜெயலட்சுமி 2 பேரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் சிவகுமார் சேலையால் நல்லம்மாள் முகத்தை மூடியதுடன், வாயையும் பொத்தியுள்ளார். அவருக்கு உதவியாக ஜெயலட்சுமி, நல்லம்மாள் கையை பிடித்து இருக்கிறார். பின்னர் அவரை கொலை செய்து விட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். முன்னதாக நல்லம்மாளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மாத்திரைஎண்ணிக்கையை விட அதிகமாக கொடுத்துள்ளனர்.

இவ்வாறு சிவகுமார் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த கொலை குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் நல்லம்மாளின் மகள் லதா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சிவகுமார், ஜெயலட்சுமி ஆகியோரை நேற்று கைது செய்தார். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story