வேலூர் பழைய பஸ் நிலைய இருசக்கர வாகன காப்பகத்தில் மும்மடங்கு கட்டணக் கொள்ளை நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


வேலூர் பழைய பஸ் நிலைய இருசக்கர வாகன காப்பகத்தில் மும்மடங்கு கட்டணக் கொள்ளை நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 March 2020 11:00 PM GMT (Updated: 6 March 2020 4:31 PM GMT)

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்தில் மும்மடங்கு கட்டண வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளையை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

வேலூர் பழைய பஸ் நிலையம் அதிக மக்கள் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்களுக்கு மற்றும் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் 24 மணிநேரமும் பயணிகள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வரும் பயணிகள் ஊருக்கு செல்லும் முன்பு தங்களது இருசக்கர வாகனங்களை கனரா வங்கி அருகே உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தி செல்வார்கள். காப்பகத்தில் இடவசதி இல்லாததால் அருகில் திறந்தவெளியில் வாகனங்களை நிறுத்தி அதற்கும் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

வழக்கமாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் 24 மணி நேரத்துக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய பஸ் நிலையத்தில் உள்ள இந்த காப்பகத்தில் 24 மணி நேரத்துக்கு மும்மடங்காக ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும், காப்பகத்தில் உள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இருசக்கர வாகனம் நிறுத்தும்போது கட்டணமாக ரூ.15 வசூல் செய்கின்றனர். அவர்கள் வழங்கும் ரசீதில் கட்டண விவரம் ஏதும் குறிப்பிடப்பிடப்படவில்லை. இதனால் நாங்களும் ரூ.15 கொடுத்து வாகனத்தை நிறுத்திவிடுகிறோம். பின்னர் வாகனத்தை எடுக்க செல்லும் போது 12 மணி நேரத்தை தாண்டி இருந்தால் கூடுதலாக ரூ.15 கேட்கிறார்கள். 24 மணி நேரத்துக்கு ஆதாவது ஒரு நாளைக்கு ரூ.30 கட்டணம் என்கிறார்கள். கட்டணத்தை அதிகரித்து சில மாதங்கள் ஆகி விட்டதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதலுடன் தான் வசூல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர். கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாது என சில வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்கிறார்கள். மும்மடங்கு கட்டண தொகையாக ரூ.30 வசூல் செய்வதை தடுத்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story