உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் மறியல்; 33 பேர் கைது


உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் மறியல்; 33 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 10:15 PM GMT (Updated: 6 March 2020 4:59 PM GMT)

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், 

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மார்ச் 6-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட அமைப்பாளர் ரத்தினமாலா தலைமையில் அந்த குழு வினர் நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்திட வேண்டும், தகவல்தொழில் நுட்பத்துறை பணியில் ஈடுபடும் பெண்களின் வேலை நேரம், பாதுகாப்பு, போக்குவரத்து ஆகியவை முறைப்படுத்தப்பட வேண்டும், தனியார்-பொதுத்துறை நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க புகார்பெட்டி அமைக்கப்பட வேண்டும்.

மேலும் அங்கன்வாடி-ஆஷா திட்ட பணி யாளர்களை வரைமுறைப் படுத்தி அரசு ஊழியர்களாக்க வேண்டும், முறைசாரா பெண் தொழிலாளர்களின் நல வாரிய பலன்களை உடனுக்குடன் பெற்றிட அரசு உத்தர வாதப்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களில் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தொடர்ந்து கரூர்-கோவை ரோட்டில் அந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி அந்த குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்து கரூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story