பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு - டீன் ரவிச்சந்திரன் தகவல்


பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு - டீன் ரவிச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 10:45 PM GMT (Updated: 6 March 2020 5:06 PM GMT)

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, 

நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைத்துறை சார்பில் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன.

முத்துகிரு‌‌ஷ்ணபேரியை சேர்ந்த தங்கபெருமாள் (வயது 55) என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரொனரி ஆஞ்சியோ கிராம் எனப்படும் இருதய ரத்த குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தங்கபெருமாளுக்கு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர், இருதய அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். துறை தலைவர் சஞ்சீவ் பாண்டியன், உதவி பேராசிரியர்கள் அருள் விஜய்குமார், கவிதா, மயக்கவியல் துறை தலைவர் அமுதா ராணி, இணைப்பேராசிரியர் மனோரமா, உதவி பேராசிரியர்கள் சுகுமாரன், ஜெயக்குமார், கார்த்திகேயன், முத்துராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருக்கிறார்.

அதேபோல் நெல்லையை சேர்ந்த ஜெபக்குமார் (வயது 58), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பாலசுந்தரம் (48) ஆகியோருக்கும் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்த கார்மேகம் (32), நாங்குநேரியை சேர்ந்த முத்துமாரி (24), அம்பையை சேர்ந்த சண்முகசெல்வி (31), களக்காட்டை சேர்ந்த சுரே‌‌ஷ் (33), மூவீலக்கரைப்பட்டியை சேர்ந்த ஜெயராணி (45) ஆகியோருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் ஏ.எஸ்.டி. எனப்படும் இருதயப் பிறவிக் கோளாறுகளுக்கும், பிறவி ஓட்டை அடைப்பு போன்ற அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த அறுவை சிகிச்சை மூலம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (10), குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த முத்துலட்சுமி (24), கோவில்பட்டியை சேர்ந்த விக்டோரியா (25) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

இதுபோன்ற நுண்துளை மூலம் நெஞ்சக அறுவை சிகிச்சைகளும், நுரையீரல் புற்றுநோய், காசநோய்களுக்கும் நெல்லை உயர் சிறப்பு மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சைத்துறையின் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனியாக 8 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

3 டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து விதமான மருந்துகள், முகக்கவசங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.

இதுவரை கொரோனா காய்ச்சல் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கொரோனா காய்ச்சல் பரிசோதனை செய்ய யாரும் முன்வரவில்லை. கொரோனா வைரஸ் பற்றி அரசிடம் இருந்து வழிகாட்டு நடைமுறை வந்துள்ளது. அதைப்பற்றி கலெக்டர் விளக்கம் அளித்தார். அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story