நெல்லையில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 110 பேர் கைது


நெல்லையில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 110 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 10:00 PM GMT (Updated: 6 March 2020 5:34 PM GMT)

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழே நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் துணை செயலாளர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெஜினா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும், பாலியல் புகார் குழுக்களில் தொழிற்சங்க பெண் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும், அனைத்து பணியிடங்களிலும் பாலியல் புகார் குழு அமைக்க வேண்டும், பாதுகாப்பற்ற தொழில்களில் இரவு நேரங்களில் பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கினை முறைப்படுத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய பணப்பலன்களை உடனுக்கு உடன் வழங்க வேண்டும், பீடி, கைத்தறி, விசைத்தறி போன்ற பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 93 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story