கொரோனா வைரஸ் வதந்தியால் கோவையில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.120-க்கு விற்பனை


கொரோனா வைரஸ் வதந்தியால் கோவையில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.120-க்கு விற்பனை
x
தினத்தந்தி 7 March 2020 4:15 AM IST (Updated: 6 March 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் குறித்த வதந்தியால் கோவையில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான சிக்கன் 65, கவாப் சிக்கன், சிக்கன் பிரை, பெப்பர் சிக்கன், லெக் பீஸ் ஆகியவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் மீன், ஆடு, மாடு உள்ளிட்ட பிற இறைச்சிகளை விட கறிக்கோழி இறைச்சி விலை குறைவு என்பதாலும், நடுத்தர மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே உலக மக்கள் கொரோனா வைரசால் பீதி அடைந்துள்ள நிலையில் இந்த தவறான தகவல்களும் மக்களை குழப்பி பீதி அடைய செய்தது. இதன்காரணமாக அசைவ பிரியர்கள் பிராய்லர் கோழி இறைச்சியை தவிர்க்க தொடங்கினர்.

விற்பனை குறைந்ததால் கறிக்கோழி விலை சரியத்தொடங்கியது. கோவையில் கிலோ ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி தற்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோழி இறைச்சி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் ஆட்டு இறைச்சி விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. தற்போது ஆட்டு இறைச்சி கிலோ ரூ.680 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட பிராய்லர் மற்றும் முட்டை விற்பனை சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:- கறிக்கோழி விற்பனையை நம்பி ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கோழிகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கறிக்கோழி குறித்து சிலர் வதந்திகளை பரப்புவதால், எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதிக்கு முன் கோவையில் ஒரு மாதத்திற்கு 40 லட்சம் கிலோ கறிக்கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. தற்போது 16 லட்சம் கிலோ முதல் 18 லட்சம் கிலோ வரைதான் விற்பனையாகிறது. சுமார் 60 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கிலோ ரூ.120-க்கு கறிக்கோழி விற்பனை செய்கிறோம். பண்ணைகளில் இருந்து ரூ.50 முதல் ரூ.55 வரை கோழிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் கோழிகளை வளர்ப்பவர்களும், வாங்கி விற்பனை செய்பவர்களும் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலம் தொடங்கியதும் கறிக்கோழி விற்பனை சரிவை சந்திக்கும். ஆனால் இந்த அளவிற்கு விற்பனை சரியாது. எனவே கோழி இறைச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது:- கொரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுவதில்லை. ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு தொடுதல், தும்மல் உள்ளிட்டவற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் அனைத்தும் குளிர்ந்த காலநிலை கொண்ட நாடுகளாகும். வெப்பநிலை குறைந்த இடத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது கடினம். கோடைகாரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தற்போது வெப்பநிலை அதிகரித்து காணப்படும். எனவே இந்த காலநிலையில் கொரோனா வைரஸ் பரவாது. மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர் உமிழ்நீர், சளி உள்ளிட்டவற்றை மற்றவர்கள் தொடும்போது அவர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக இந்த நோய் தாக்கிய நபர் கை வைத்த அதே இடத்தில், மற்ற நபர் தனது கைகளை வைத்தால் அவருக்கு இந்த நோய் ஏற்படும் எனவே தான் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பிராய்லர் கோழி இறைச்சியில் 25 சதவீதம் புரத சத்து உள்ளது. ஆரோக்கியமான உடலுக்கு புரத சத்து மிகவும் அவசியம். எனவே கோழி இறைச்சி சாப்பிடுவதால் நமக்கு புரதசத்து அதிகமாக கிடைக்கிறது. நம்நாட்டில் அனைத்து வகை இறைச்சிகளையும் வேக வைத்து சாப்பிடுவோம். ஆனால் பிற நாடுகளில் பாதி வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இறைச்சி தொடர்பான நோய்கள் வருகின்றன. எனவே கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என்ற தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story