கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: முகக்கவசம் அணிந்து பணியாற்றும் வங்கி, ஆஸ்பத்திரி ஊழியர்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கூடலூரில் வங்கி மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்.
கூடலூர்,
உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் உகான் மகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று உள்ளது. இதனை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நாளடைவில் இத்தாலி, ஜப்பான், ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது.
இதற்கிடையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரசை தடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் என மக்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை ஏற்று கூடலூர் பகுதியில் உள்ள வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தவாறு பணியாற்றி வருகின்றனர். மேலும் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் பலர் முகக்கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.
இதேபோன்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனர். மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களையும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய உடன் முகம், கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும். மேலும் குழந்தைகளையும் சுகாதாரமாக இருக்க அறிவுரை வழங்க வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வெளியாட்களிடம் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story