உத்தமபாளையம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் சென்ற வக்கீல் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்


உத்தமபாளையம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் சென்ற வக்கீல் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 7 March 2020 5:00 AM IST (Updated: 6 March 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வக்கீலை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 45). இவர் உத்தமபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

ரஞ்சித்குமார் நேற்று உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான பணிகளை செய்து கொண்டிருந்தார். பின்னர் அந்த பணிகளை முடித்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்ல தயாரானார். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உத்தமபாளையம்-கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு காரில் மர்ம கும்பல் அமர்ந்துகொண்டு வக்கீல் ரஞ்சித்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரஞ்சித்குமார் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் இருந்து கம்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஏற்கனவே அவரை கண்காணித்து கொண்டிருந்த மர்ம கும்பல், ரஞ்சித்குமார் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து காரில் சென்றது.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பழைய சினிமா தியேட்டர் அருகில் சென்றபோது, மர்ம கும்பல் தங்களது காரால் முன்னால் சென்ற ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதையடுத்து காரில் வந்த மர்ம கும்பல் கீழே இறங்கி அரிவாளால் கண் இமைக்கும் நேரத்தில் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பியோடிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் துடிதுடித்து இறந்துபோனார்.

ஒருசில நிமிடங்களில் முடிந்துபோன இந்த கொலை சம்பவத்தை பார்த்து, அந்த வழியாக மோட்டார் சைக்கிள், காரில் சென்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த வக்கீல் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ரஞ்சித்குமாரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவரது உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ரஞ்சித்குமாரின் உறவினர்கள் உத்தமபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story