ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு ஆலய விழாவுக்கு 2881 பேர் படகுகளில் பயணம் - கலெக்டர் வீரராகவராவ் வழியனுப்பி வைத்தார்


ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு ஆலய விழாவுக்கு 2881 பேர் படகுகளில் பயணம் - கலெக்டர் வீரராகவராவ் வழியனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள 2 ஆயிரத்து 881 பேர் படகுகளில் பயணம் மேற்கொண்டனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழியனுப்பி வைத்தார்.

ராமேசுவரம்,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. 287 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

இருநாட்டு மீனவர்களும் வழிபடும் புனித அந்தோணியாருக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த திருவிழாவில் சாதி, மத பேதமின்றி இருநாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் இந்த திருவிழா கலாசார, பண்பாட்டு ஒற்றுமையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 ஆயிரத்து 4 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் பக்தர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ராமேசுவரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

74 விசைப்படகுகளிலும், 23 நாட்டுப்படகுகளிலும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 2881 பேர் சென்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நேற்று காலை 6 மணி முதல் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றவர்களை வருவாய்த்துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அதன் பின்னர் ராமேசுவரத்தில் இருந்து காலை 7 மணி முதல் ஒவ்வொரு படகாக கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றது. கடைசியாக பிற்பகல் 2.15 மணிக்கு இந்த பணி முடிவடைந்தது. தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் பக்தர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

கச்சத்தீவு பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு வழியனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை 4.30 மணி அளவில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை எமிலிபால் கச்சத்தீவு ஆலயத்தில் திருவிழா கொடியேற்றி, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிலுவைகளை தோளில் சுமந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்று இரவு 8 மணியளவில் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இலங்கையைச் சேர்ந்த ஏராளமானவர்களும் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்குத்தந்தையர்களும் கலந்து கொள்கின்றனர்.

கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதேபோல இலங்கையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இந்திய கடற்படை கமாண்டர் வெங்கடேசன், இந்திய கடலோர காவல்படை கமாண்டர் அனில் ஆகியோர் தலைமையில் கடற்படையினர், கடலோர காவல்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கச்சத்தீவு விழா காரணமாக மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story