உப்பாற்றில் மருந்து கழிவுகள் கொட்டப்படும் அவலம்
உப்பாற்றில் மருந்து கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், ஆறு மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள உப்பாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டப்படுவதாலும், மருந்து கழிவுகள் கொட்டப்படுவதாலும் ஆறு மாசடைந்து வருகிறது. இதை உப்பாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் அவற்றை உடனே அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி பகுதிக்கு வரும் உப்பாறு தென்பகுதி கரந்தமலையிலிருந்து உருவாகி நத்தம் வழியாக பிரிந்து கோவில்பட்டி, அம்மாபட்டி வழியாக சிங்கம்புணரி வந்தடைகிறது. மேலும் இந்த உப்பாறு சிங்கம்புணரி பகுதியில் உள்ள பட்ட கோவில்களம் பகுதியில் உள்ள பாலாற்றில் இணைந்து உப்பாறு-பாலாறு ஆகிய இரண்டு ஆறுகளும் இணைந்து திருப்பத்தூர் பெரிய கண்மாயில் சங்கமிக்கின்றன.
பாலாறு-உப்பாறு ஆகிய இரு ஆறுகளின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இது பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக மழை இன்றி உப்பாற்றில் தண்ணீர் வராததால் வறண்டு கிடக்கிறது.
கடந்த ஆண்டு சிங்கம்புணரியில் இருந்து அணைக்கரைப்பட்டி செல்லும் சாலை அருகே உள்ள உப்பாற்று பாலம் மற்றும் ஆற்றுப்பகுதில் கலெக்டரின் உத்தரவின் பேரில் கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது உப்பாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து மண், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் உப்பாறு மூடும் நிலை உருவாகியுள்ளது. மேலும் உப்பாற்று பாலம் அருகில் மருந்து கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு உள்ளது.
இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. அணைக்கரைப்பட்டி, கிருங்காகேட்டை, பிரான்மலை, எஸ்.புதூர் போன்ற பகுதிகளுக்கு இந்த பாலத்தை கடந்து ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும் பொதுமக்களின் நடமாட்டமும் இந்த பகுதியில் அதிக அளவில் உள்ளது. இப் பாலத்தின் கீழ் மருந்து கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாலத்தின் அருகில் உப்பாற்றில் ஆக்கிரமிப்பு செய்து மண்களை போட்டு மூடுவதால் உப்பாறு பாதை நிரந்தரமாக மூடப்பட்டு விடுமோ என்று பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சிங்கம்புணரி சாலை அணைக்கரைப்பட்டி செல்லும் பகுதியில் உள்ள உப்பாறு பாலம் அருகே ஆக்கிரமிப்பு செய்து கொட்டப்படும் மண், குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், மருந்து கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story