போடி தாலுகாவில் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் - பொதுமக்கள் அவதி


போடி தாலுகாவில் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 7 March 2020 3:15 AM IST (Updated: 7 March 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

போடி தாலுகாவில் ஆன்லைன் மூலம் இருப்பிடம், சாதி உள்ளிட்ட வருவாய்த்துறை சான்றிதழ்களை வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

போடி, 

தேனி மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தாலுகாவாக போடி உள்ளது. போடி தாலுகாவில் கோடாங்கிபட்டி, ராசிங்காபுரம், போடி ஆகிய உள்வட்டங்களில் 15 வருவாய் கிராமங்கள் உள்ளன. பொதுமக்கள் வருவாய்த்துறை சான்றிதழ் பெற சிரமப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு, சாதி, வருமானம், இருப்பிடம், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறு, குறு விவசாயி சான்று உள்ளிட்ட 20 வகையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன்படி போடி தாலுகாவில் உள்ள 15 வருவாய் கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மணப்பெண்கள், விவசாயிகள், வேலை தேடும் இளைஞர்கள் அரசு மற்றும் பொது இ-சேவை மையங்கள், கணினி மையங்கள் மூலம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பங்களை அனுப்புகின்றனர்.

இவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களை, அந்தந்த வருவாய் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உள்வட்டங்களை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பரிந்துரை செய்து சான்றிதழ்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையிலேயே பெற்று வந்தனர்.

இந்தநிலையில் போடி தாலுகாவில் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களை பரிந்துரை செய்வதில் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களே விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்ப 7 முதல் 10 நாட்கள் வரை தாமதம் செய்கின்றனர். இதேபோல் ஒவ்வொரு நிலையிலும் விண்ணப்பம் தாமதமாகி சான்றிதழ்களை பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி உதவித்தொகை போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் ஏழை இளம்பெண்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காமல், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போய்விடுகிறது. இதேபோல் விவசாயிகள் விவசாய மானியம் போன்றவற்றை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து போடி தாலுகாவில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

Next Story