முல்லைப்பெரியாற்றில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
முல்லைப்பெரியாறு வறண்டு வரும் நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் மர்மகும்பல் திருடி வருகிறது.
தேனி,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.45 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே அணையில் இருந்து ஆற்றின் வழியாக குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை மர்ம கும்பல் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை பலரும் ஆற்றுக்குள் இருந்து மின்மோட்டார், டீசல் மோட்டார்கள் மூலம் திருட்டுத்தனமாக எடுக்கின்றனர். பலர் தங்களின் தோட்டத்து கிணறுகளில் சேமித்து வைத்து விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வணிக நோக்கத்திலும் தண்ணீர் எடுப்பதாக கூறப் படுகிறது.
இவ்வாறு மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி, அரண்மனைப்புதூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் ஆறு வறண்டு கிடக்கிறது. வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதன் தாக்கமாக வைகை அணைக்கும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.
இதனால், வீரபாண்டியில் இருந்து குன்னூர் வரையுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீர்மட்டம் குறைந்து, இந்த உறைகிணறுகளை நம்பியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சட்டவிரோதமாக ஆற்றுக்குள் மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுப்பதை தடுக்கவும், குடிநீருக்கு திறந்து விடப்படும் தண்ணீரை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதை தடுக்கவும் பொதுப்பணித்துறை, போலீஸ் துறை, மின்வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story