நகைகளை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது; 80 பவுன் நகை மீட்பு


யுவராஜ்
x
யுவராஜ்
தினத்தந்தி 6 March 2020 10:00 PM GMT (Updated: 6 March 2020 7:23 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகைகளை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 80 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

பாடாலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்த நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், அசோக்குமார், ஏட்டுகள் பாலமுருகன், சண்முகம், ஆறுமுகம் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட்-காரை பிரிவு ரோட்டில் சந்தேகம்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சரிவர பதில் கூறாததால், போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், மாகரல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குமார் மகன் யுவராஜ் என்கிற டேனிக் (வயது 28), மற்றொருவன் 17 வயதுடைய சிறுவன் என்பதும், அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெரம்பலூரில் தங்கியிருந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை திருடியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், 17 வயதுடைய சிறுவனையும் கைது செய்தனர். இதில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை சீர்த்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நகை திருட்டு சம்பவங்களின் முக்கிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக கைதான 2 பேரிடம் இருந்து 80 பவுன் நகைகள் மற்றும் திருட்டு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை ஈடுபட்ட 2 குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பாராட்டினார்.

Next Story