கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்; அமைச்சர் பேட்டி


கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்; அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 10:30 PM GMT (Updated: 6 March 2020 7:36 PM GMT)

கோழி, முட்டை உண்பதால் கொரோனா வைரஸ் ஏற்படாது. கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பதற்றப்படவோ, அச்சம் கொள்ளவோ தேவையில்லை. அதே சமயம் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

சீனாவிலேயே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதமும், சீனாவை தவிர வெளிநாடுகளில் 0.2 சதவீதம் மட்டுமே உயிரிழப்புக்கு வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தமிழக அரசால் இதில் அதிக கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். குறிப்பாக கோழி மற்றும் முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா வைரஸ் வரும் என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

இந்நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ, அவர்கள் தும்மும் போதோ, இருமும் போதோ வெளியேறும் நீர்திவலைகளை தொடும் போது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு நாளும் அதிகாரப்பூர்வமான தகவல்களை பொதுமக்களுக்கு அளித்து கொண்டுள்ளது. அதே சமயம் இந்நோய் குறித்து கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story