கள்ளக்குறிச்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


கள்ளக்குறிச்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 6 March 2020 10:30 PM GMT (Updated: 6 March 2020 8:25 PM GMT)

கள்ளக்குறிச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கலெக்டர் கிராண்குராலா பேசும் போது, கொரோனா வைரசால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே வெளிநாட்டிலிருந்து யாராவது நம் மாவட்டத்துக்கு வந்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் சுத்தமாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாருக்காவது அறிகுறி இருந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அதே போல் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களிடையே கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி எடுத்துரைத்தார். மேலும் சோப்பு போட்டு கைகளை எப்படி கழுவ வேண்டும் என செயல் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சித்துறை என அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story