கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 March 2020 10:00 PM GMT (Updated: 6 March 2020 8:25 PM GMT)

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான அறிமுக பயிற்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்,

மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 366 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள ஊராட்சி மன்ற கூட்டரங்கம் மற்றும் வட்டார சேவை மையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அறிமுக பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

வார்டு உறுப்பினர்கள் கிராமங்களில் எந்தவொரு பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானவராக இருந்து பணியாற்ற வேண்டும். தங்களது பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீராக உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். அதனால் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே, மக்கள் பிரதிநிதிகளான நீங்கள் கிராம மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் இணைந்து சரியான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். எனவே அனைத்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தங்கள் கிராமத்தை சிறந்த கிராமமாக உருவாக்க முழுமையான பங்களிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் விஷ்ணுபரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story