ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் வழங்க கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம்


ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் வழங்க கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 March 2020 10:45 PM GMT (Updated: 6 March 2020 8:42 PM GMT)

ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் வழங்க கோரி ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, 

தெற்கு ரெயில்வேயில் சுரங்கப் பாதை, நடைமேடைகள் அமைத்தல், கட்டுமான பணிகள், ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்பட பல்வேறு பணிகளை டெண்டர் எடுத்து ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்ததாரர்களுக்கு தொகையை ரெயில்வே நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், அதனை உடனே வழங்க கோரி தெற்கு ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சி ஜங்ஷனில் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜோசப் லூயிஸ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் வெங்கடபெருமாள் உள்பட சேலம், மதுரை, திருச்சி கோட்டத்தை சேர்ந்த ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘தெற்கு ரெயில்வேயில் 300 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். தமிழகத்தில் ரெயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் ரூ.1,200 கோடியை ரெயில்வே நிர்வாகம் கடந்த 4 மாதங்களாக வழங்காமல் உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க முடியவில்லை. நிலுவை தொகையை ரெயில்வே நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.

ரெயில்வேக்கு தனியாக பட்ஜெட் இருந்தபோது நிதி ஒதுக்கப்பட்டு சரியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மத்திய பொது பட்ஜெட்டில் ரெயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்ட பின் நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை. நிதிகள் ஒதுக்காமல் பணிகளை ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் விட வேண்டாம்’ என்றனர். ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்த பணிக்கான நிலுவை தொகை ரூ.2 கோடி வரை வழங்காததால் கர்நாடகாவில் தற்கொலை செய்த ஒப்பந்ததாரர் ஒருவரின் புகைப்படத்திற்கு ஒப்பந்ததாரர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒப்பந்ததாரர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று கட்டுமான பணிகள் பாதிப்படைந்தன.


Next Story