நஷ்டத்தை ஈடுகட்ட பண்ணைகளில் 20 சதவீத கோழிக்குஞ்சுகளை குறைக்க முடிவு; தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் பேட்டி
மைனஸ் விலையில் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால், நஷ்டத்தை ஈடுகட்ட பண்ணைகளில் 20 சதவீத கோழிக்குஞ்சுகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நாமக்கல்,
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சொசைட்டியின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் முத்துசாமி, செயலாளர் ராஜேந்திரன், மார்க்கெட்டிங் சொசைட்டியின் பொருளாளர் காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முட்டை விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பண்ணையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது முட்டை உற்பத்திக்கு 4 ரூபாய் 10 காசுகள் செலவாகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு விற்பனை விலையாக 3 ரூபாய் 8 காசுகளை நிர்ணயம் செய்தாலும், 2 ரூபாய் 50 காசுகளுக்கு தான் முட்டைகள் பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனால் வாடிக்கையாளர்களும் ஏமாற்றப்படுகின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு கறிக்கோழியில் சுமார் ரூ.15 கோடியும், முட்டைக்கோழியில் சுமார் ரூ.6 கோடியும் நஷ்டம் ஏற்படுகிறது.
75 வாரங்களில் விற்க வேண்டிய கோழிகளை 65 அல்லது 70 வாரங்களில் விற்க இன்று (நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து உள்ளோம். மேலும் நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது வாங்கும் கோழிக்குஞ்சுகளை விட 20 சதவீதம் குறைவாக கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணைகளில் விடவும் முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். முட்டை விலையை நிர்ணயம் செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து அமைக்கப்பட்ட குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் அவர்களின் ஆலோசனைகளை சரிவர தெரியப்படுத்துவது இல்லை.
இதனால் மைனஸ் விலைக்கு தான் முட்டைகள் பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. பண்ணையாளர்களுக்கு வியாபாரிகளிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை. அதனால் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரே, மைனஸ் இல்லாத விலையை முட்டைக்கு நிர்ணயம் செய்ய முன்வர வேண்டும். அந்த விலைக்கு தான் பண்ணையாளர்கள் முட்டையை கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் பீதியால் முட்டை விலையில் பாதிப்பு இல்லை. கறிக்கோழி விலையில் தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story