அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள்
திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் குற்றச்செயல்களை தடுக்க வழிபாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படிகள் வழியாக சென்று வர மலையடிவாரத்தில் இருந்து 1,200 படிகள் உள்ளது. வழியில் தங்கி செல்ல மண்டபங்களும், வாகனங்களில் சென்று வர 3½ கி.மீட்டர் தூரத்திற்கு தார்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகளவில் பக்தர்கள் படிகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கிடையே ஏராளமான காதல் ஜோடிகளும் தினந்தோறும் இங்கு வருகின்றனர்.
அவர்கள் மண்டபங்களில் உள்ள மறைவிடங்களிலும், படிகளில் ஓரமாக அமர்ந்தும் பேசுகின்றனர். மேலும் பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையில் காதல் ஜோடிகள் நடந்து கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க அவ்வாறு மறைவிடங்களில் அமர்ந்து காதலை வளர்க்கும் ஜோடிகளை குறிவைக்கும் மர்மநபர்கள் அவர்களை மிரட்டி பணம், நகை பறிப்பது, காதலனை அடித்துவிட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. மேலும் அங்குள்ள பாறையின் மீது ஏறி சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதையும் காண முடிகிறது.
இந்த செயல்கள் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் புகார் அளித்தனர்.இந்தநிலையில் திருச்செங்கோடு நகர போலீசார் தினமும் மலைப்பாதையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன் மலைப்பாதையில் சுமார் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கோவிலுக்கு வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக மலைப்பாதையில் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் குறையும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மத்தியில் ஆதரவும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story