வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 March 2020 10:15 PM GMT (Updated: 6 March 2020 9:58 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கி இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி பழையபேட்டை 12-வது வார்டில் உள்ள நல்லதம்பி தெருவில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் வெளியேறாமல் சாக்கடை கால்வாயில் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தெருவில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெருவின் ஓரத்தில் குடிநீர் பிடிக்கும் குழாய் மற்றும் குடிநீர் பிடிக்கும் தொட்டி ஆகியவற்றை சுற்றி கழிவுநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

ஆனாலும் நேற்று வரை கழிவுகால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காந்திசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- கடந்த ஒரு மாதமாக இங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீடுகளில் சாப்பிட கூட முடியவில்லை. தேங்கியுள்ள கழிவுநீரால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள். இது குறித்து அறிந்த நகராட்சி ஆணையாளர் சந்திரா அங்கு சென்றார். பின்னர் அவர் பொக்லைன் எந்திரம் மூலம் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து, கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் உறுதியளித்தார். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story