கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி சம்பவத்தை மூடிமறைக்க தொழிற்சாலை நிர்வாகம் முயன்றதால் பரபரப்பு
தனியார் தொழிற்சாலை யில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
சென்னை,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள இரண்டு கழிவுநீர் தொட்டிகள் முழுவதுமாக நிரம்பியது. இதையறிந்த அந்த நிர்வாகம் அந்த கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் திருவள்ளூர் அடுத்த புட்லூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வேலவன் (வயது 40), புட்லூர் எம்.ஜி.ஆர் நகர், ம.பொ.சி தெருவை சேர்ந்த சந்துரு (35), புட்லூர் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவை சேர்ந்த ராஜசேகரன் (44)ஆகிய மூன்று தொழிலாளர்களை அழைத்தனர்.
மேற்கண்ட மூன்று தொழிலாளர்களும் நேற்று மதியம் அந்த நிறுவனத்தில் உள்ளே இருந்த 2 கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தயாரானார்கள்.
அப்போது ராஜசேகரன் முதலில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அதைத்தொடர்ந்து சுமார் 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சீர் செய்வதற்காக மற்றொரு தொழிலாளியான சந்துரு ஏணி மூலம் உள்ளே இறங்கினார்.
பரிதாபமாக இறந்தனர்
அப்போது திடீரென அவரை விஷவாயு தாக்கியதில் கழிவு நீர் தொட்டியிலேயே மூச்சுத்திணறி மயங்கி கீழே விழுந்தார்.
இதைக் கண்ட சக தொழிலாளியான வேலவன், சந்துருவை மீட்க உள்ளே இறங்கினார். அப்போது அவரும் விஷவாயு தாக்கியதில் மயக்கம் ஏற்பட்டு, அதே கழிவு தொட்டியில் உள்ளே விழுந்ததில், இருவரும் பரிதாபமாக இறந்து போனார்கள்.
இதையறிந்த அருகிலிருந்த ராஜசேகரன் 2 தொழிலாளர்களை மீட்க முயன்றபோது, அவரையும் தாக்கியதில், விஷவாயு தாக்கி அவர் தரையில் விழுந்து விட்டார்.
சுமார் அரை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த ராஜசேகரன் வெளியே வந்து, நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்பவத்தை மூடி மறைக்கும் எண்ணத்துடன், தொழிலாளி ராஜசேகரனை அங்கு உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பாதுகாத்தனர்.
பொதுமக்கள் திரண்டனர்
இருப்பினும் அவர் தனது செல்போன் மூலம் சம்பவம் குறித்து புட்லூரில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் காக்களூர் மற்றும் புட்லூர் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி, புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் குவிப்பு
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த தனியார் நிறுவனத்தை சுற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்து குவிக்கப்பட்டனர்.
இறந்த சந்துரு மற்றும் வேலவனின் உறவினர்கள் அங்கு வந்து உடலை கண்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இறந்த சந்துருவுக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், அஸ்வின், அரவிந்தன் என்ற 6 வயது கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அதேப்போல இறந்துபோன வேலவனுக்கு திருமணமாகி தேவி என்ற மனைவி உள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இறந்து போன சந்துரு, வேலவன் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் காக்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story