திருவாரூரில், இன்று மாலை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா
திருவாரூரில், இன்று மாலை விவசாய சங்கங்கள் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதனையொட்டி நகர் முழுவதும் பச்சைக்கொடி கட்டி விவசாயிகள் முதல்-அமைச்சரை வரவேற்று உள்ளனர்.
கொரடாச்சேரி,
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி ரங்கநாதன் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இரா.காமராஜ், சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு, எம்.சி.சம்பத், எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கு கின்றனர்.
மேலும் தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பயரி கிருஷ்ணமணி, காவிரி தனபால், ஆர்.சுகுமாரன், ஜி.எஸ்.தனபதி, பி.ரவீந்திரன், மு.ராஜேந்திரன், க.சேதுராமன், இரா.பாண்டுரங்கன், சி.வேலு, டாக்டர் கோபால் ஆகியோரும் பாராட்டுரை வழங்கு கின்றனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றுகின்றனர்.
முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்று பேசுகிறார். இறுதியில் காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று காலை 8 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அமைச்சர் இரா.காமராஜ்் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். திருவாரூருக்கு முதல்-அமைச்சர் வருகை தரவுள்ளதையொட்டி அவரை வரவேற்கும் விதமாக விவசாயிகள் சார்பில் திருவாரூர் நகர் முழுவதும் பச்சை வண்ணக் கொடிகள் கட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விவசாயிகளின் பாராட்டு விழாவிற்கு மதிப்பளிக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் தங்களது கட்சி கொடியினை கட்டாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story