கடலூர் மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் ஆய்வு - 85 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கடலூரில் உள்ள மீன்மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். இதில் 85 கிலோகெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
கடலூர்,
மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ‘பார்மலின்’ என்கிற ரசாயனம் தடவி வைத்திருப்பதாகவும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து மீன் மார்க்கெட்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கடலூர் மீன்வளத் துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, உணவு பாதுகாப்புத்துறை டாக்டர் சுகுணன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் முதுநகரில் உள்ள மீன் மார்க்கெட், முதுநகர் மீன் அங்காடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவது இல்லை என்பது தெரிய வந்தது.
ஆனால், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட்டில் 10 கிலோ மீன்களும், கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் 75 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்து முறைப்படி அழித்தனர்.
மேலும் ரசாயனம் தடவிய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று மீன் வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதோடு அங்கிருந்த பொதுமக்களிடம் நல்ல மீன்களை கண்டறிவது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகளின் திடீர் ஆய்வால் இரு மீன்மார்க்கெட்டுகளிலும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story