ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியல் - 103 பேர் கைது


ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியல் - 103 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 10:15 PM GMT (Updated: 6 March 2020 11:44 PM GMT)

ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கு இணையான சம்பளம் பெண்களுக்கும் வழங்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு(சி.ஐ.டி.யு.) சார்பில் கடலூர் உழவர் சந்தை அருகே மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பு அறிவித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் உழவர் சந்தை அருகில் நேற்று காலை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் உழவர்சந்தை அருகே உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட கன்வீனர் சாவித்திரி தலைமையில் பெண்கள் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் சங்க கொடியை கையில் பிடித்தபடி ஊர்வலமாக சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட கன்வீனர் சாவித்திரி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல், செயலாளர் கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சாந்தகுமாரி, மனோரஞ்சிதம், சூரியகலா, மீரா, அம்முனி, தனம் உள்ளிட்ட 103 பேரை போலீசார் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Next Story