ஒரு வாரத்துக்குள் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கவில்லையெனில் போராட்டம் தமிழ் விவசாயிகள் சங்கம் தீர்மானம்
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று நடந்தது.
கோவில்பட்டி,
ஒரு வாரத்துக்குள் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் சங்க கூட்டம்
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் நம்பிராஜன், மாநில பொறுப்பாளர் சீனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, துணை தலைவர் சாமியா, அவை தலைவர் வெங்கடசாமி, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணசாமி, வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–
பயிர் காப்பீட்டுத்தொகை
பாண்டியன் கிராம வங்கியானது தமிழ்நாடு கிராம வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால், அந்த வங்கியின் சேமிப்பு கணக்கு எண்களும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு அந்த வங்கியில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தினர் காப்பீட்டுத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கவில்லையெனில், சென்னையில் உள்ள அந்த காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.
தமிழக அரசின் கறவை மாடுகள், வெள்ளாடுகள், கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி பயனாளிகளை தேர்வு செய்து வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள், மானியங்களை கிராமப்புற விவசாயிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story