பட்டாசு ஆலையில் தீ விபத்து: மேலும் ஒருவர் சாவு மேலாளர் கைது
திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருவேங்கடம்,
திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
தீ விபத்து
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குளக்கட்டாகுறிச்சி–மேலப்பட்டி ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் உள்ள 8 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 39 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் பணிக்கு சென்றனர். அங்குள்ள 3–வது அறையில் தரைசக்கர பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் திருவேங்கடம் அருகே சீவகம்பட்டி என்ற சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கணபதிசாமி மகன் சேவுகபாண்டியன் (31), திருவேங்கடம் அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரியப்பன் (41) ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். அவர்கள், வெடிமருந்தினை பட்டாசுக்குள் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த அறையில் வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அறையில் இருந்த வெடிமருந்து, தரைசக்கர பட்டாசு முழுவதும் குபுகுபுவென்று தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த அறைக்குள் சிக்கி கொண்ட சேவுகபாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தீயில் கருகி பலத்த காயம் அடைந்த மாரியப்பன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
மேலும் ஒருவர் சாவு
தீ விபத்து நிகழ்ந்ததும், அங்குள்ள மற்ற அறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இந்த தீவிபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையின் மேலாளர் மாரிச்சாமியை கைது செய்தனர். வெடி பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story