அறிவு பெறவும், அறிவுறுத்தவும் வேண்டும்: கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பரப்புங்கள் கல்லூரி மாணவிகளுக்கு வைரமுத்து அறிவுரை
கொரோனா வைரஸ் குறித்து அறிவு பெறவும், அறிவுறுத்தவும் வேண்டும் என்றும், அது பற்றி விழிப்புணர்வும் பரப்ப வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகளுக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கினார்.
சென்னை,
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை விழா நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
உலகை அச்சுறுத்தும் கொரோனா நச்சுயிரியை எதிர்கொள்வதில் இந்திய பெண்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. நீங்கள் அந்த நோய் பற்றி அறிவு பெறவும் வேண்டும்; அறிவுறுத்தவும் வேண்டும். சார்ந்திருக்கும் சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். எனவே கொரோனா குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
தோழிகளோடு நீங்கள் கைகுலுக்கவும் வேண்டாம்; கட்டிப்பிடிக்கவும் வேண்டாம்; கை கூப்புங்கள்; போதும். கொரோனாவிடம் இருந்து மக்களைக் காக்க துடிக்கும் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் கூட, ‘கை கூப்பித் தொழும் இந்திய மரபைப் பின்பற்றுங்கள்’ என்று நமது பண்பாட்டைத்தான் எடுத்துரைக் கிறார்.
எச்சரிக்கையாக இருங்கள்
கைகளையும், சுவாசப்பைகளையும் சுத்தமாக வைத்திருங்கள். இருமலோ தும்மலோ மூன்றடிக்கு மேல் பரவாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகத் தயங்காதீர்கள்; ஆனாலும் அச்சப்படாதீர்கள்.
இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு. கோடை கொளுத்தத் தொடங்கி விட்டது. நம் இயற்கையே நச்சுயிரிகளை எரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது. நாம் வாழ்ந்துவரும் சூழலே நோயைத் தடுப்பதற்கு நம் உடலைப் பழக்கியிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களெல்லாம் இறந்து விடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை விட்டு விடுங்கள்.
இதில் குணப்படுத்தக்கூடிய சாத்தியம் அதிகம் இருப்பது சத்தியம். ஆனாலும், சமாதானக்கொடி பறந்தாலும் துப்பாக்கியை விட்டுத் தோட்டாவை கழற்றாத படை வீரனைப்போல் எச்சரிக்கையாக இருங்கள்.
சமூக மாற்றம் இல்லை
உங்கள் சுதந்திரத்தை இழக்காதீர்கள். ஆனால் விழுமியங்களை விட்டுக் கொடுக்காதீர்கள். ஆடை உடுத்துதல் என்பது உங்கள் சுதந்திரம். அது காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். துகில், தாவணி, சேலை, சல்வார், கமீஸ், மிடி, ஜீன்ஸ், லெக்கின்ஸ் என்று ஆடை வடிவம் என்ற நாகரிகம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், மானம் காத்தல் என்ற பண்பாடு மட்டும் மாறாது. மாறும் நாகரிகத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாறாத பண்பாட்டை மாற்றக்கூடாது.
பெண்களின் இந்த பெருங்கூட்டத்தில் இருந்து ஒரு கல்பனா சாவ்லா, ஒரு அன்னை தெரசா, ஒரு சரோஜினி நாயுடு, ஒரு மேடம் கியூரி, ஒரு இந்திரா காந்தி, ஒரு செரீனா வில்லியம்ஸ் தோன்ற வேண்டும். இன்று மின்சாரத்தை கழித்துவிட்டு முன்னேற்றம் இல்லை, பெண்களைக் கழித்துவிட்டு சமூக மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கல்லூரித் தலைவர் குமார் ராஜேந்திரன், முதல்வர் மணிமேகலை, தமிழ்த்துறைத் தலைவர் அபிதா மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story