விவசாயிகள் தானமாக வழங்கிய நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை; கூட்டுறவு சங்க தலைவர், மருமகனுடன் கைது


விவசாயிகள் தானமாக வழங்கிய நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை; கூட்டுறவு சங்க தலைவர், மருமகனுடன் கைது
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே திராட்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் தானமாக வழங்கிய நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து விற்பனை செய்த கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

உத்தமபாளையம் தாலுகா, ஓடைப்பட்டி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் திராட்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக விவசாயிகள் சிலர் தொழில் கூட்டுறவு துறைக்கு 3 ஏக்கர் 85 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். இதற்காக 1999-ம் ஆண்டு திராட்சை பதப்படுத்தும் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையை சேர்ந்த கலைச்செல்வம் (வயது 70) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கு உறுப்பினர்கள் தரப்பில் போதிய அளவில் பங்களிப்பு நிதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கடந்த 2006-ம் ஆண்டு இந்த சங்கம் கலைக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் தனி அலுவலர் மூலமாக, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக கூட்டுறவு சங்கம் பெயரில் இருந்த 3 ஏக்கர் 85 சென்ட் நிலத்தை கலைச்செல்வம், கடந்த 2018-ம் ஆண்டு போலியாக ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கலைச்செல்வம் திராட்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிலத்தை சென்னை தொழில் வணிக இயக்குனரிடம் இருந்து அனுமதி பெற்றது போன்று போலியான அரசு உத்தரவு மற்றும் ஆவணங்களை தயார் செய்து, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் முருகன் என்பவரின் பெயருக்கு ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் நிலத்தை விற்பனை செய்த அதே நாளில், அந்த நிலத்தை கலைச்செல்வத்தின் மருமகன் வினோத்குமாருக்கு ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்துக்கு முருகன் விற்பனை செய்தது போல் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கவிதா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்க தலைவராக இருந்த கலைச்செல்வன், அவருடைய மகள் ஆதவி, மருமகன் வினோத்குமார் (46), முருகன் மற்றும் கூடலூரை சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், கலைச்செல்வன், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story