நாகை அரசு விழாவில் பால்-நெய் மதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதை


நாகை அரசு விழாவில் பால்-நெய் மதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதை
x
தினத்தந்தி 8 March 2020 5:30 AM IST (Updated: 8 March 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

நாகை அரசு விழாவில் பால்-நெய் மதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி குட்டிக்கதை கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகையில் நடந்த அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால்-நெய்யின் மதிப்பு குறித்து குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதன் விவரம் வருமாறு;-

குட்டிக்கதை

கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் அரசு பல்வேறு தரப்பிலும் இருந்து தினமும் வந்த சவால்களை எதிர்கொண்டு அவைகளை சமாளித்து மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறது. இந்த அரசு மக்களுக்கான அரசு என மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும், க‌‌ஷ்டங்களும் நமது தரத்தை, மதிப்பை உயர்த்தும் என்று சொல்வார்கள். இதை நினைக்கும்போது எனக்கு ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

அந்த கதையை இங்கே நான் கூறுகிறேன்.

பால்-நெய் மதிப்பு

பசுவின் பாலுக்கு ஒரு வருத்தம். பசுவின் அடி வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு ஆக்கினார்கள். எனக்கு சூடு தாங்க முடியவில்லை. பசுவின் அடிவயிற்றில் இருந்த எனக்கு ஏன் இந்த சோதனை என்று எண்ணி வருந்தினேன். வருந்திய நிலையில் நான் பொங்கி வழிந்தேன். என்னை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தனர். பின்னர் என்னோடு மோர் சேர்க்கப்பட்டது. இது என்ன புது தண்டனை என்று நான் வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப்பற்றி கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் பின்னர் திடப்பொருளாக மாறினேன். எனக்கு தயிர் என்று புதிய பெயர் வைத்தனர். அத்துடன் நிற்கவில்லை. என்னை ஒரு பானையில் ஊற்றி மத்து வைத்து கடைந்தனர். நான் மறுபடியும் மோர் என்ற திரவம் ஆனேன். என்னிடம் இருந்து ஒரு திரவப்பொருளை வரவழைத்து அதற்கு ‘பட்டர்’(வெண்ணெய்) என்று பெயர் வைத்தனர். ‘பட்டர்’ என்ற பெயரை கேட்டதும் அப்பாடா இனியாவது எனது வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா? என்று எண்ணினேன்.ஆனாலும் அந்த வெண்ணெய்யை மறுபடியும் அடுப்பில் வைத்து சூடாக்கி நெய் என்று பெயர் வைத்தனர். உருகிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி வீட்டின் ஜன்னல் அருகே வைத்தனர். பாலாக இருந்த நான் பட்ட க‌‌ஷ்டங்களை நினைத்தபடி இருந்த வேளையில் ஜன்னலுக்கு வெளியே 2 பேர் பேசிக்கொண்டு செல்வதை கேட்டேன். நமது ஊரில் பால் அரை லிட்டர் ரூ.15. நெய் ரூ.250 என்று பேசிக்கொண்டு சென்றனர். இதைக்கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். பால் ஆக இருந்தபோது எனது மதிப்பு ரூ.15 தான். பல க‌‌ஷ்டங்களை அடைந்து நெய்யாக மாறிய பிறகு எனது மதிப்பு ரூ.250 என்று நினைக்கும்போது நான் பட்ட க‌‌ஷ்டம் எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

4-வது ஆண்டில்...

சாதனை படைத்த அனைவரும், சோதனைகளை சந்தித்து அதை சாதனையாக மாற்றியதுதான் காரணம். அதுபோன்று ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த அரசு பல தரப்பில் இருந்து வந்த சவால்களையும், நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்தபோது பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு செயல்பட்டதால் இன்று அனைத்து மக்களின் பேராதரவையும் பெற்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story